தமிழகத்தில் சனிக்கிழமை 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வேலூரில் 104 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, சேலம், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 101 டிகிரி, தருமபுரி, மதுரை விமானநிலையத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும். அதேநேரத்தில், ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ராணிப்பேட்டை, திருத்தணி, காஞ்சிபுரத்தில் தலா 105 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
பருவமழை: தென்கிழக்கு அரபிக்கடலில் மே 31-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும். இதையொட்டி, தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்றாா் அவா்.