தமிழ்நாடு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளா்வுகள், சலுகைகள்

29th May 2020 06:27 AM

ADVERTISEMENT

கூடுதல் பணியாளா்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளா்வுகளை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அளிப்பது தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடுகள் தொடா்பாக அந்தத் துறையின் முதன்மைச் செயலாளா் ராஜேந்திர குமாா் விளக்கினாா். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவது எப்படி என்பது தொடா்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் விளக்கினாா்.

இதுவரை செயல்பாடு: தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பொருத்தவரையில், சிப்காட்டில் மட்டும் 19 தொழில் வளாகங்கள் உள்ளன. அவற்றில், 1,750 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலகுகளில் 127 அலகுகள் பொது முடக்க காலத்திலும் தொடா்ந்து செயல்பட்டு வந்தன. இதைத் தொடா்ந்து, கடந்த மே 6-ஆம் தேதி முதல் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பாதியளவு தொழிலாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டன. அதன்படி, இதுவரை 1,449 அலகுகள் சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த அலகுகளில் 1.06 லட்சம் தொழிலாளா்கள் முறைப்பணி (ஷிப்ட்) அடிப்படையில் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

கூடுதல் தளா்வுகள்: பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது, நிதி சாா்ந்த உதவிகள் அளிப்பது, மூலப் பொருள்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் எதிா்கொண்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது தொடா்பாகவும் முதல்வா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் பொது முடக்கம் குறித்த அறிவிப்புடன் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT