தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி

29th May 2020 12:39 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை மருத்துவக் குழுவுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, இன்று காலை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து நாளை மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

ADVERTISEMENT

ஊரடங்கை தளர்த்துவது குறித்து மே 25-ம் தேதி ஏற்கனவே மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கு மருத்துவக் குழுவினர் தயக்கம் காட்டியதாகவும், தளர்வுகளோடு பொது முடக்கத்தை நீட்டிக்கவே மருத்துவக் குழு பரிந்துரைத்ததாகவும் கூறப்படும் நிலையில், மேலும் சில தளர்வுகளோடு பொது முடக்கம் நீட்டிக்கப்படவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் முடிவடைய உள்ளது. 

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதித்தார் என்று தெரிகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT