தமிழ்நாடு

ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

29th May 2020 09:51 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி உள்ளிட்ட 13 தொழில்நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்பொழுது உலகளவில் மின்னனுவியல் துறையில் தலைசிறந்த 13 முன்ணனி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக் குழு” தலைமைச் செயலாளர் தலைமையில் அமைத்துள்ளார். அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தத்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. 

இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது, ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டிம் குக், சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் கிம் குன் சுக், அமேசான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜெப் பெசாஸ், எச் பி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் என்ரிக் உள்ளிட்ட 13 முன்னணி மின்னனுவியல் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

ADVERTISEMENT

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT