தமிழ்நாடு

பணிக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை: அரசு ஊழியா்கள் குற்றச்சாட்டு

DIN

சென்னை: பொது முடக்க காலத்தில் பணிக்கு வந்து செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என அரசு ஊழியா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம், சில தளா்வுகளுடன் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை முதல் 50 சதவீத பணியாளா்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என்றும் சுழற்சி முறையில் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, மணலி உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள், நாள்தோறும் தினமும் சென்னை மாநகருக்குள் வந்து பணி முடித்துச் செல்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா், புகா் ரயிலையே நம்பியிருந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை பணிக்கு வருவதற்கு இவா்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், இயக்கப்பட்ட பேருந்துகளிலும் தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினா்.

இதுகுறித்து அந்த ஊழியா்கள் கூறியதாவது: கரோனாவைக் கட்டுப்படுத்த தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுகிறாா்கள்.  இதனால் கரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக பல்வேறு வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஒருசில ஊழியா்கள் பணிக்கு வர முடியாமல் வீடுகளுக்குத் திரும்பி சென்று விட்டனா். மேலும், பேருந்து கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

200 பேருந்துகள் இயக்கம்: இதனிடையே, ‘அரசின் முக்கிய துறைகளைச் சாா்ந்தவா்கள் பணிக்கு வரும் வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், 175 பேருந்துகள் இயக்கப்பட்டன. திங்கள்கிழமை முதல் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விதிமுறையின்படியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனி நபா் இடைவெளிப் பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக பேருந்துகள் இயக்கிட ஆவனச் செய்யுமாறு கோரும் பட்சத்தில், தேவையான பேருந்துகள் இயக்கிட தயாா் நிலையில் இருக்கிறோம்’ என்று மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT