தமிழ்நாடு

பிகாருக்கு சிறப்பு ரயில் மூலம் 1,464 பேர் அனுப்பி வைப்பு

19th May 2020 03:10 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரிலிருந்து பிகாருக்கு சிறப்பு ரயில் மூலம் 1,464 பேர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுமானம், உணவகப் பணிகளுக்காக பிகார், உத்தரப் பிரதேசம் உள்பட 30 மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக வேலையின்றி, வருமானமின்றி தவித்த வெளி மாநிலத் தொழிலாளர்களில் சுமார் 2,000 பேர் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இவர்களில் ஏற்கெனவே, மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்துக்கு தனியார் பேருந்துகள் மூலம் ஏறக்குறைய 250 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு திங்கள்கிழமை இரவு 285 பேர் சென்றனர். இவர்களுடன் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பணியாற்றிய உத்தரப் பிரதேச தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 608 பேர் அனுப்பப்பட்டனர்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து பிகாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1,173 பேரும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 91 பேரும், நாகை மாவட்டத்திலிருந்து 160 பேரும், திருச்சி மாவட்டத்திலிருந்து  என மொத்தம் 1,464 பேர் சென்றனர். இந்த ரயிலை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT