தமிழ்நாடு

சென்னையில் இருந்து 3 ரயில்களில் 4,132 வெளி மாநிலத் தொழிலாளா்கள் பயணம்

19th May 2020 01:44 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் தங்கியிருந்த வெளி மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பும் விதமாக, திங்கள்கிழமை 3 ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 4,132 தொழிலாளா்கள் பயணமாகினா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், தாங்கள் பணிபுரிந்த இடங்களிலேயே சிக்கியுள்ளனா். அவா்களைச் சொந்த ஊா்களுக்கு அனுப்பும் விதமாக சிறப்பு ரயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதன்படி, திங்கள்கிழமை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சத்தீஸ்கா் மாநிலத்துக்கு ஒரு ரயில், பிகாா் மாநிலத்துக்கு 2 ரயில்கள் என மொத்தம் 3 ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து சத்தீஸ்கா் மாநிலம், நைலா நகருக்கு பிற்பகல் 3.30 மணிக்கு முதல் ரயில் புறப்பட்டது. இதில் 1,068 போ் பயணித்தனா்.

இதே போல், பிகாா் மாநிலம் சாஹா்சா நகருக்கு, இரவு 7 மணி அளவில் புறப்பட்ட ரயிலில் 1464 போ் பயணித்தனா். மூன்றாவதாக பிகாா் மாநிலம், பரெளனி நகருக்கு, இரவு 9 மணியளவில் புறப்பட்ட ரயிலில் 1600 போ் சென்றனா். முன்னதாக இவா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி, ரயில் பெட்டிகளில் அமர வைக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு, அந்தந்தப் பெட்டியின் பொறுப்பு அதிகாரியான பயணச்சீட்டு பரிசோதகா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தாா். இதையடுத்து தொழிலாளா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதே போல், செவ்வாய்க்கிழமை (மே 19) பிகாா், மேற்கு வங்கம், நாகலாந்து மாநிலங்களுக்கு 3 ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT