தமிழ்நாடு

அண்ணாமலைப் பல்கலை.யில் பணிநிரவல் ஊழியர்கள் போராட்டம்

19th May 2020 04:52 AM

ADVERTISEMENT


சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்வேறு அரசுத் துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் தவித்த நிலையில், தமிழக அரசு அந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்றது. 

இதையடுத்து, நிதி சிக்கலைக் குறைப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 4,000 பேர் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களில், மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிமுடிந்த ஊழியர்களுக்கு தற்போது மீண்டும் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்பட உள்ளதாம். 
இதைக் கண்டித்தும், தங்களது ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்காமல் மீண்டும் பல்கலைக்கழகத்திலேயே பணியமர்த்த உத்தரவிட வலியுறுத்தியும் பணிநிரவல் ஊழியர்கள் நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால், இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையாம்.

ADVERTISEMENT

பணி நிரவல் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குடைகளை பிடித்தவாறு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தனர். இவர்களிடம் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணி நிரவல் ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமோகனைச் சந்தித்து மனு அளித்தனர். 
அவர்களது கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்வதாகப் பதிவாளர் தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT