தமிழ்நாடு

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்

15th May 2020 03:19 PM

ADVERTISEMENT

 

சேலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.

கரோனா தொற்று பாதித்து 35 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  இவர்களில் வியாழக்கிழமை வரை  32 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒருவரும், தொளசம்பட்டியைச் சேர்ந்த ஒருவரும், தருமபுரி மாவட்டம் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவரும் வெள்ளிக்கிழமை மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் கே.பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார், துணை ஆணையாளர் பெ.தங்கதுரை,  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தீபா கனிகர்,  சேலம் மாநகராட்சி ஆணையாளர்  ரெ.சதீஷ்,சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல் சன், மாநகராட்சி நகர்நல அதிகாரி பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தனர்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3 பேரும் வீட்டுக்குச் சென்றதும் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும், கட்டாயம் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி விட்டு இருக்குமாறும் தெரிவித்து வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த மார்ச் 23இல் 16 பேர் கரோனா தொற்று பாதிப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களில் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த நான்கு பேரும், சென்னை சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் முதன்முதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

கடந்த 52 நாட்களுக்கும் மேலாக மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து 35 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். சிறப்பான பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுவினரை  மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பாக மகாராஷ்டிரம், பீகார் போன்ற ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா  பரிசோதனை செய்யக் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது .

இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து வரும் லாரி ஓட்டுனர்களும் கரோனா பரிசோதனை செய்யக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுதவிர சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  சேலம் மாவட்டம் இன்றிலிருந்து கரோனா  தொற்று இல்லாத மாவட்டமாக மாறி இருக்கிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT