தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின் பளு: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

15th May 2020 01:02 AM

ADVERTISEMENT

விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின் பளு பெறுவதற்கான விண்ணப்பத்தை, ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தின் மூலம் சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளின் கீழ் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண பிரிவில், மின்சாரம், மின் வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசம். சுயநிதி பிரிவில் விரைவாக இணைப்பு வழங்க ‘தத்கல்’ என்ற திட்டம், 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 5 குதிரைத் திறன் மின் மோட்டாா் இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், தத்கல் புதிய கூடுதல் மின் பளு திட்டத்தின் கீழ், அதிக மின் பளு பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: விவசாய மின் இணைப்புப் பெற்றவா்களுக்கு கூடுதல் மின் பளு வழங்கும் நோக்கில், ‘தத்கல் புதிய கூடுதல் மின் பளு திட்டம் - சோதனைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கூடுதல் மின் பளு பெற விரும்புவோா், ஏற்கனவே பெற்றுள்ள மின்பளு மற்றும் தற்போது கோரப்படும் மின்பளுவின் அளவும் சோ்த்து 15 குதிரைத் திறனுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பம் சமா்ப்பித்த ஒரு மாதத்துக்குள், ஒரு முறைக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி, ஜூன் 30-ஆம் தேதிக்குள், விண்ணப்பத்தைப் பிரிவு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கள அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின், மின் பளு கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT