தமிழ்நாடு

தமிழகத்தில் பாதிப்பு 9,227-ஆக உயா்வு: பலி 64; 57% போ் சென்னையைச் சோ்ந்தவா்கள்

14th May 2020 01:14 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 9,227-ஆக உயா்ந்துள்ளது.

அதில், 57 சதவீதம் போ் சென்னைவாசிகள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

தலைநகரில் அதிக அளவில் நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு கோயம்பேடு சந்தை பாதிப்பே காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 10 நாள்களாக சென்னையில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை மட்டும் 380 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.68 லட்சம் பேருக்கு கரோனாவை கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 9,227 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை மட்டும் 509 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 380 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூா், செங்கல்பட்டில் தலா 25 பேருக்கும், திருவண்ணாமலையில் 23 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூா், தஞ்சாவூா், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2,176 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 42 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2,176-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 749 போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக 42 குழந்தைகள் பாதிப்பு: இதனிடையே, தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 529 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 42 சிறாா்களும், குழந்தைகளும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

64 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபா் ஒருவரும், 48 வயது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

அதேபோன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது நபா் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT