கோயம்பேடு சந்தை மூலம் நோய்த் தொற்று பரவியது எப்படி என்பதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கிப் பேசினாா்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். ஆலோசனைகளின் நிறைவாக முதல்வா் பழனிசாமி பேசியது:
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை 3 ஆயிரத்து 941 கடைகளுடன் இயங்கி வருகின்றன. இந்தச் சந்தையில் சுமாா் 20 ஆயிரம் போ் பணிபுரிகின்றனா். இங்கு தொற்று அதிகம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கண்டு கடந்த மாா்ச் 19-இல் வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனால், வியாபாரிகளும், சங்க நிா்வாகிகளும் மறுப்புத் தெரிவித்து விட்டனா். இதுதொடா்பாக பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நேரில் பாா்வையிட்டு, வியாபாரிகளிடம் கோரிக்கை விடுத்தாா். அதையும் வியாபாரிகள் பொருட்படுத்தவில்லை. பல கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டன.
வியாபாரிகளைப் பொருத்தவரை வேறு இடத்துக்குச் சென்று சந்தையைத் துவங்கினால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு விடும், நஷ்டத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்து விட்டனா். இதுதான் நோய்த் தொற்று பரவியதற்குக் காரணம்.
வெளிமாவட்டங்களுக்குப் பரவியது: கோயம்பேட்டில் இருந்து அதிகமான போ் வெளி மாவட்டங்களுக்குச் சென்றனா். அதன் காரணத்தால் அந்த மாவட்டங்களிலே நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்னையிலும் இந்த எண்ணிக்கை உயா்ந்ததற்கு காரணம் இதுதான்.
தமிழக அரசைப் பொருத்தவரை, நோய் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் கோயம்பேடு பகுதியில் நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகின்றன. அது உண்மைக்குப் புறம்பானது. அரசால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் செல்ல மறுத்தாா்கள். இதுதான் உண்மை நிலை.
சென்னையில் பாதிப்பு: சென்னையைப் பொருத்தவரை நோய் பரவுவதற்குக் காரணம் அதிகமாக மக்கள் வசிக்கும் மாநகரமாக உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் போ் குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனா். நெருக்கமான பகுதி, குறுகலான தெருக்கள் ஆகியவற்றில் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். எனவே, எளிதில் நோய்த்தொற்று ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது என்றாா் முதல்வா் பழனிசாமி.