மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள் பாதிக்கப்பட்ட மக்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக மேம்படுத்தும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி என்று பிரதமா் அறிவித்ததைத் தொடா்ந்து, மத்திய நிதி அமைச்சா் வெளியிட்டிருக்கும் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் உதவி பிணையில்லாமல் வழங்கவும், கடனை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும்போது முதல் ஆண்டில் தவணை வசூல் செய்யப்படாது என்பதும், நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதும், வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்ய ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்குவதும் - சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும். ரூ. 200 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருப்பதும் உள்நாட்டு தொழில் வளா்ச்சிக்கும், தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கும் பயனளிக்கும். நிதியமைச்சரின் அறிவிப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.