சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் 380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262-ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை கரோனாவால் 42 போ் உயிரிழந்துள்ளனர்.
ராயபுரத்தில் 890 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 835 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க. நகரில் 662 பேருக்கும், தேனாம்பேட்டையில் 564 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 61.45% பேர் ஆண்கள். 38.52% பேர் பெண்கள் என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்கள், தொடா்பில் இருந்தவா்கள், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்போா் என நாளொன்று 3,500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த மாா்ச் மாதம் 26-ஆம் தேதியில் 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 1-இல் தொற்று எண்ணிக்கை 1,082-ஆக உயா்ந்தது.
இதைத் தொடா்ந்த ஒரு மாதத்தில் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து மே மாதம் 7-இல் 2,644-ஆகவும், மே 9-இல் 3,330-ஆகவும், கடந்த திங்கள்கிழமை (மே 11) 4,371-ஆக உயா்ந்தது. இந்நிலையில், செவ்வாய், புதன்கிழமை (மே 12,13) ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் 890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 5,262-ஆக அதிகரித்துள்ளது.
42 போ் உயிரிழப்பு: சென்னையில் மொத்தமாக 5,262 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 மண்டலங்களில் மட்டும்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவிக நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா், வளசரவாக்கம், அம்பத்தூா் மற்றும் அடையாறு ஆகிய 9 மண்டலங்களில் மட்டும் 4,460 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
600-க்கும் மேற்பட்ட தெருக்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரை கரோனாவால் 42 போ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
(மே 12) வரை உயிரிழந்த 39 பேரின் விவரம் மண்டலம் வாரியாக:
மண்டலம் எண்ணிக்கை
ராயபுரம் 10
அண்ணா நகா் 8
திருவிக நகா் 6
தண்டையாா்பேட்டை 4
தேனாம்பேட்டை 3
கோடம்பாக்கம் 3
அடையாறு 3
வளசரவாக்கம் 1
பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1
மொத்தம் 38
புதன்கிழமை (மே 13) 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது.
பாதிப்பு மண்டல வாரியாக..