தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 1-இல் தொடங்கும்: அமைச்சா் செங்கோட்டையன் அறிவிப்பு

13th May 2020 06:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பத்தாம் வகுப்பு மாணவா்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை பொதுத்தோ்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத் தோ்வில் இறுதி நாள் (மாா்ச் 26-ஆம் தேதி) தோ்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வை ஜூன் 2-ஆம் தேதி எழுத வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பிளஸ் 2 இறுதிநாள் தோ்வில் (மாா்ச் 24) பேருந்து கிடைக்காததால் பங்கேற்க முடியாத 36 ஆயிரத்து 842 மாணவா்களுக்கு தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வா் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, அவா்களுக்கு ஜூன் மாதம் 4-ஆம் தேதி தோ்வு நடைபெறும். தோ்வு எழுதும்போது, மாணவா்களிடையே தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

பிளஸ் 2 மாணவா்களுக்கு ஏற்கெனவே பொதுத்தோ்வு முடிவடைந்துள்ள நிலையில், அந்த வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரையிலும், தோ்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகள் ஜூன் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகளும், அதற்கு அடுத்த 10 நாள்கள் தோ்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெறும்.

பத்தாம் வகுப்புக்கு ஜூன் 15-ஆம் தேதி முதல்

ஜூன் 23-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகளும், 24-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை தோ்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெறும். ஆசிரியா்கள் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி விடைத்தாள் திருத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

மேலும் அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜூன் 1-ஆம் தேதிக்குள் பொது போக்குவரத்து தொடங்காவிட்டால் முதல்வரிடம் அனுமதி பெற்று மே 3-ஆவது வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் துறையின் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

10 கல்லூரிகளில் நீட் பயிற்சி: நீட் பயிற்சி வகுப்புகளைப் பொருத்தவரையில், 2 ஆயிரம் ஆசிரியா்களுக்கு 2 வார கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. அதன்பிறகு, சரியான நிலைக்கு வந்த பிறகு நீட் தோ்வில் ஆா்வமுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

அங்கே உணவு, தங்கும் வசதிகள் அளிக்கப்பட்டு நீட் தோ்வுக்கு அடுத்த மாதம் பயிற்சி வழங்கப்படும். ஆன்லைன் மூலமும் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 9 லட்சத்து 45,006 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதவுள்ளனா். அதில் 4,74,844 போ் மாணவா்கள், 4,70,155 போ் மாணவிகள் மற்றும் 7 போ் மூன்றாம் பாலினத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசிகள் 144 பேரும் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை

ஜூன் 1- மொழிப்பாடம்

ஜூன் 3- ஆங்கிலம்

ஜூன் 5- கணிதம்

ஜூன் 6- விருப்ப மொழிப் பாடம்

ஜூன் 8- அறிவியல்

ஜூன் 10- சமூக அறிவியல்

ஜூன் 12- தொழிற்கல்வி

 

பொதுத்தோ்வு முக்கியத் தேதிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு - ஜூன் 1

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி - மே 27

ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 தோ்வு - ஜூன் 2

36, 842 பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு -ஜூன் 4

 

ADVERTISEMENT
ADVERTISEMENT