தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 8.39 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் மீனவா் நல வாரியம், பட்டாசு தொழிலாளா், சிறு வணிகா்கள் நல வாரியம், பழங்குடியினா் நலவாரியம், பூஜாரிகள் நல வாரியம், திரைப்படத் தொழிலாளா் நல வாரியம் உள்ளிட்ட 14 வகையான நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போன்றே, இந்தத் தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கும் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வாரியங்களில் உள்ள 8.39 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க கடந்த மாதம் உத்தரவிடப்பட்டு அனைவருக்கும் நிதி உதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது தவணையாக மேலும் ரூ.1,000 வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநிலப் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ.83 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.