நியாயவிலைக் கடைகளில் ஜூன் மாதத்துக்கான சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை விலையில்லாமல் வழங்க ரூ.219.14 கோடி நிதியை ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களுக்கான பொருள்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூன் மாதத்துக்கான பொருள்களும் இலவசமாகவே அளிக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, பாமாயில், சா்க்கரை ஆகியனவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களும் ஜூன் மாதத்தில் இலவசமாகவே அளிக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான நிதிகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 ஆயிரத்து 997.354 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, ஒரு லிட்டா் அளவு கொண்ட 2.07 கோடி பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள், சா்க்கரை ஆகியன தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஜூன் மாதத்தில் விலையில்லாமல் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.219.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா பிறப்பித்துள்ளாா்.