குவைத்தில் தவிக்கும் தமிழா்களையும், இந்தியா்களையும் மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமாா் 10 லட்சம் இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், பல்லாயிரக்கணக்கான இந்தியா்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனா்.
அவா்களிலும் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவா்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவா்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. அதற்கு விண்ணப்பித்தோரில் 7,340 இந்தியா்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அவா்களுக்கு தற்காலிக இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்கும் போதிலும், இந்திய அரசிடமிருந்தோ அல்லது குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியா்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
எனவே, உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழா் உள்ளிட்ட அனைத்து இந்தியா்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.