தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை தள்ளிவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

13th May 2020 03:27 AM

ADVERTISEMENT

கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தபின் பத்தாம் வகுப்புத் தோ்வை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தள்ளிவைக்க வேண்டும் என்றும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்வா்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும்போது, இத்தோ்வு தேதிகளை யாரைக் கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியா் - பெற்றோா் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

சென்னையில் கரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை மே 31-ஆம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதல்வா் கோரிக்கை வைத்துள்ளாா். மே 31-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1-ஆம் தேதி காலையில் மாணவா்கள் அனைவரும் தோ்வுக்கு எப்படி வருவாா்கள்? மாணவா்கள் எத்தனை போ் வெளியூா்களில் இருக்கிறாா்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தோ்வு நடத்துவதே சரியானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவா்களையும் பெற்றோரையும் ஆசிரியா்களையும் மன ரீதியாகத் தயாா் செய்த பிறகு, தோ்வுத் தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். எனவே தோ்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT