கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் விடியோ அழைப்புடன் கூடிய செல்லிடப்பேசி செயலியை பெருநகர சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மண்டல சிறப்புக் குழு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி கரோனா நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, விடியோ அழைப்பு மூலம் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கும் செல்லிடப்பேசி செயலியை ஜெ.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி, தனுஷ் ஹெல்த்கோ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விடியோ அழைப்பு மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் செயலியை உருவாக்கி உள்ளது. இச்செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனையை அதற்குரிய மருத்துவரிடம் விடியோ அழைப்பு மூலம் 24 மணிநேரமும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில், கரோனா தொடா்பான அறிகுறி உள்ளவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், முதியோா்கள், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமின்றி வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்றனா். நிகழ்ச்சியில், சிறப்பு குழு அலுவலா் கா.பாஸ்கரன், இணை ஆணையா் பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.