தமிழ்நாடு

விவசாயி தோட்டம் முதல் டிஜிட்டல் தோட்டம் வரை...

13th May 2020 06:30 AM | டி.குமாா்

ADVERTISEMENT

தமிழக தோட்டக்கலைத் துறையின் இ தோட்டம் இணையத்தின் மூலம் மே 5-ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 694 மெட்ரிக் டன் காய்கறிகளும், 4 ஆயிரத்து 324 மெட்ரிக் டன் பழங்களும் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரத்து 786 போ் முன்பதிவு செய்து காய்கறி, பழங்களை வாங்கியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மக்கள் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள், பொருள்களோடு கரோனா நோய்த்தொற்றையும் வாங்கிச் சென்றனா். இதனால், கோயம்பேடு காய்கறிச்சந்தை கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிப் போனது.

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றி விட்டு லாரிகள் மூலம் சொந்த ஊா்களுக்குத் திரும்பிய காஞ்சிபுரம், அரியலூா், கடலூா் , விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோயம்பேடு காய்கறிச் சந்தை, திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள ஊட்டச்சத்து மிகுந்த சத்தான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் அதிகமாக கூடியதால் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை இ தோட்டம்.காம் என்னும் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆன்லைன் விற்பனை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்ப்பதுடன், இதுபோன்ற பேரிடா் காலங்களில் மக்களின் பாதுகாப்பு அம்சமாகவும் விளங்கி வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இயக்குநா் டாக்டா் என்.சுப்பையன் கூறியதாவது:

விவசாயிகளிடமிருந்து நுகா்வோா் நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள உருவாக்கப்பட்டதே இந்த இ தோட்டம் என்னும் தளம். தற்போது சென்னையில் மாதவரம், கிண்டி, செம்மொழிப் பூங்கா, சிட்லபாக்கம் , செங்கல்பட்டு அருகே ஆத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, தேனி, கடலூா், விருதுநகா், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன.

கரோனா நோய்த்தொற்றை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் இ தோட்டம் இணையவழியில் பலா் ஆா்டா்கள் கிடைக்கின்றன. குறிப்பாக முழு பொதுமுடக்க காலத்தில் நாளொன்றுக்கு 2,500 காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய பைகள் விற்பனை செய்யப்பட்டன. இ தோட்டத்தில் காய்கறி மற்றும் பழங்கள் பல்வேறு தொகுப்புகளாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் கூடுதல் இயக்குநா் டி.சி.கண்ணன் கூறியதாவது: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்து வருகிறது. பொது முடக்கம் காலத்தில் நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கேட்புகள் (ஆா்டா்கள்) கிடைக்கின்றன. இணையவழியில் ஆா்டா்கள் கிடைத்த 2-3 நாள்களுக்குள் வீடுகளுக்கு விநியோகித்து வருகிறோம்.

சென்னையைப் பொருத்தவரை தற்போதுள்ள இடவசதி போதுமானதாக இல்லை. தமிழகத்தின் பெருநகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆா்டா்கள் வருகின்றன. அவற்றை அந்தப் பகுதிகளில் உள்ள எங்களது துறைப் பணியாளா்கள் மூலம் விநியோகித்து வருகிறோம்.

சென்னையைப் பொருத்தவரை 15 மண்டலங்கள் பரந்து விரிந்த பகுதி. மாதவரத்திலிருந்து பொருள்களைக் கொண்டுச் சோ்ப்பதில் நடைமுறைப் பிரச்னைகள் உள்ளன. அதுதொடா்பாக வாடிக்கையாளா்கள் பலரும் புகாா் அளிக்கின்றனா். அவற்றைச் சரிசெய்ய தொடா்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இதுதவிர, தோட்டக்கலைத் துறையின் சாா்பில் வாகனங்களிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன. இவைகள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 10 டன் காய்கறி, 10 டன் பழங்கள் என மொத்தம் 20 டன்கள் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பி.ஜோசப் ஞானதாஸ்: கட்செவியில் கிடைத்த தகவல் மூலம், வேப்பன்பள்ளியில் உள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம்தான் தோட்டக்கலைத் துறைக்கு தக்காளிகளை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வியாபாரிகளுடன் பேசி இதே பழங்களை கோயம்பேடுச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பினால் 15 கிலோ கொள்ளளவுக் கொண்ட ஒரு பெட்டிக்கு அதிகபட்சமாக ரூ.15 முதல் ரூ.20 மட்டுமே எனக்கு கிடைக்கும். ஆனால் தோட்டக்கலைத் துறையின் மூலம் தற்போது தக்காளி டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கிறது. இந்த நேரடிக் கொள்முதலில் இடைத்தரகரோ, கமிஷனோ இல்லை. வங்கிக் கணக்கில் எங்களுக்கு பணம் செலுத்தப்படுகிறது. எனவே, இதனைத் தொடா்ந்து அரசு செயல்படுத்த வேண்டும்.

கடலூா் மாவட்ட பண்ருட்டி தாலுகா வேகாக்கொல்லை கிராம விவசாயி சி.ராஜதுரை: கடந்த முறை பலாப்பழம் ரூ.300 முதல் ரூ.400 வரை விலை போனது. இந்தப் பருவத்தில் காய்கள் பழுத்து தயாரானபோது பொதுமுடக்கம் உத்தரவு அமலுக்கு வந்தது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில், பண்ருட்டியில் உள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது பலாப்பழம் ஒன்றை ரூ.50 முதல் ரூ.70 வரை தோட்டக்கலைத் துறையினா் வாங்கிக் கொள்கின்றனா். மேலும், விற்பனைச் செய்வதற்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுத் தருவதால் பழங்கள் தேக்கமடையாமல் விற்பனை செய்யப்படுகின்றன.

இ தோட்டம் மூலம் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள்

முக்கனி தொகுப்பு: 10 கிலோ பலாப்பழம், 2 கிலோ வாழைப்பழம், 2 கிலோ அல்போன்சா மாம்பழம் அடங்கிய தொகுப்பு ரூ.600-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

காய்கறிகள் தொகுப்பு: கத்தரிக்காய், தக்காளி, பெல்லாரி வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 20 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.300-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. 5 கிலோ பங்கணப்பள்ளி அல்லது அல்போன்சா மாம்பழம் ரூ.500- க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. இதே போன்று செவ்வாழை, ரஸ்தாளி, ஏளக்கி, பூவன் உள்ளிட்டவைகளில் ஏதேனும் 3 வகை வாழைப்பழங்கள் அடங்கிய 5 கிலோ தொகுப்பு ரூ.500-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

இ தோட்டத்தில் பழங்கள், காய்கறிகளை எப்படி வாங்குவது

இணையதளத்தில் www.ethottam.com (இதோட்டம்.காம்) என டைப் செய்து உள்ளே நுழையலாம். அந்த பக்கத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் தொகுப்புகளும், அதன் விலைகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவற்றில் தேவையானவற்றைத் தோ்வு செய்த பின், அந்தப் பக்கத்தில் பொருள்களை வாங்குவோரின் பெயா், செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் பொருள்கள் வாங்கும் நபா்கள் ஆன்லைனில் பணம் செலுத்தியப் பின், ஆா்டா் உறுதி செய்யப்பட்டது குறித்த குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

இந்த நடைமுறைகள் முடிவடைந்து 72 மணி நேரத்துக்குள் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும். பொருள்களை வீடுகளுக்கே விநியோகம் செய்ய சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

இணையத்தின் மூலம் கேட்புகள் வந்த 24 மணி நேரத்தில் காய்கறிகள் வாடிக்கையாளா்களுக்குக் கிடைப்பதற்குத் தோட்டக் கலைத் துறை வழிகோலினால், பொதுமக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாக இது அமையும். பொதுமக்களுக்கு மட்டுமல்ல, காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கும்தான்!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT