பொது முடக்க காலகட்டத்தில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சங்கத்தின் நூலகரான வழக்குரைஞா் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், பொது முடக்க உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காய்கறி, பழங்களை விவசாயிகள் குப்பைகளில் வீசுகின்றனா். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அழுகக் கூடிய விவசாயப் பொருள்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘விவசாயப் பண்ணைகளில் இருந்து 6,000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. இவை 10,100 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதால், சென்னை மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் 500 டன் காய்கறி, பழங்கள் கொள்முதல் செய்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக நாள்தோறும் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் வீதம் இதுவரை 53, 593 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 138 குளிா்சாதன கிடங்குகளில் 7 ஆயிரத்து 755 மெட்ரிக் டன் அளவுக்கு விவசாயிகளுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமாா் 6.92 லட்சம் விவசாயிகள், ‘உழவன்’ செயலியின் சேவையைப் பயன்படுத்துகின்றனா். மேலும், பொது முடக்க காலகட்டத்தில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு ரூ.522.64 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நேரடி கொள்முதல் தொடா்பாக விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதுதொடா்பாக மாவட்ட குறைதீா் அலுவலகத்தில் முறையிட்டு நிவாரணம் பெறலாம். இதில் ஏதாவது கூடுதல் நடவடிக்கை தேவையென கருதினால் மனுதாரா் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என உத்தரவிட்டு விசாரணையை மே 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.