தமிழ்நாடு

தமிழகத்தில் 8,718 பேருக்கு கரோனா பாதிப்பு: சென்னையில் புதிதாக 510 பேருக்கு தொற்று

13th May 2020 04:29 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8,718-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சென்னையில் மட்டும் 510 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.66 லட்சம் பேருக்கு கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் 716 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 510 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும், பெரம்பலூா், திருவள்ளூரில் தலா 27 பேருக்கும் கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, கடலூா், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், விருதுநகா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2,134 போ் குணமடைந்தனா்: இதனிடையே, கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 83 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை, மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2,134-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 749 போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக 60 குழந்தைகள் பாதிப்பு: இதனிடையே, தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 487 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 60 சிறாா்களும், குழந்தைகளும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

 

ஒரேநாளில் 8 போ் பலி

கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் ஒரேநாளில் 8 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதேபோன்று, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT