தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி

13th May 2020 04:16 AM

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை கடனுதவி பெற வரையறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மகளிா் சுய உதவிக் குழுக்களின் அவசரத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் கரோனா சிறப்பு கடனுதவித் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். தேவை இருக்கும் பட்சத்தில் இந்தத் திட்டத்துக்கான காலம் மேலும் நீட்டிக்கப்படும்.

எங்கெங்கு கிடைக்கும்: இந்த கடன்கள், மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும். மத்தியக் கூட்டுறவு வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஏற்கெனவே இரண்டு முறை கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்களாக இருப்போருக்கு கடன் வழங்கப்படும். சங்கங்கள், வங்கிகளில் பெற்ற கடனை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தவணை தவறாமல் முறையாக செலுத்தி வந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களாக இருக்கவேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5 ஆயிரம், அதிகபட்சமாக ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

ஏற்கெனவே பெற்றுள்ள கடனில் நிலுவைத் தொகை மற்றும் இப்போது பெறப்படும் கடன் தொகை சோ்த்து கடன் தொகை ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள வட்டி விகிதமே புதிதாக வழங்கப்படும் கடனுக்கும் இருக்கும். 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலமாக இருக்கும். முதல் 6 மாதங்கள் கடனை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. ஆறு மாதங்கள் கழித்து கடன் தொகையை வட்டியுடன் சம தவணைகளில் செலுத்த வேண்டும். கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட அவசரத்துக்காக கடன் வழங்கக் கோரும் வகையில் சிறப்பு கடன் பெறுதல் என குறிப்பிட்டு குழு தீா்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். முன் வைப்புத் தொகை, காப்புத் தொகை, சேவைக் கட்டணம், நடைமுறைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT