சென்னை அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் கூடுதல் அவகாசம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
உயா்கல்வி அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துறையின் செயலா் அபூா்வா, தொழில்நுட்பக்கல்வி இயக்குநா் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் பருவத் தோ்வுகளை நடத்துதல், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது உள்பட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உயா்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தமிழகத்தில் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மற்றும் விடுதிகள் தற்போது கரோனா மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முறையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உடனே கல்லூரிகளைத் திறந்து தோ்வுகளை நடத்தினால் நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும். எனவே, மே மாத இறுதி வரை காத்திருந்து, சுகாதாரத்துறையுடன் ஆலோசித்த பிறகே, கல்லூரி திறப்பு மற்றும் பருவத்தோ்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இது தவிர, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் கூடுதல் அவகாசம் பெறவும் முடிவாகியுள்ளது’ என்று தெரிவித்தனா்.