தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது

13th May 2020 01:28 PM

ADVERTISEMENT

 

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை  ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதனைத் தொடர்ந்து 16-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி சூறாவளி காற்றானது மணிக்கு 45 - 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

ADVERTISEMENT

அடுத்தடுத்து நாள்களில் காற்றின் வேகம் தொடர்ந்து உயரும் என்றும், இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : cyclone
ADVERTISEMENT
ADVERTISEMENT