தமிழ்நாடு

காங்கேயத்தில் 1,150 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 டாஸ்மாக் பணியாளர்கள் உள்பட 6 பேர் கைது

13th May 2020 04:22 PM

ADVERTISEMENT

 

காங்கேயத்தில் வாகனத்தில் 1,150 மது பாட்டில்கள் கடத்தியதாக 2 டாஸ்மாக் பணியாளர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.தனராசு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காங்கேயம் நகரம், திருப்பூர் சாலையில் உள்ள ஹாஸ்டல் பேருந்து நிறுத்தம் அருகே வாகன  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் பெட்டிகளில் அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அங்கிருந்த ஒரு பனியன் கம்பெனி குடோனில் வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, திருப்பூர்-பாண்டியன் நகர் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் திருமூர்த்தி (41), காங்கேயம்-அர்த்தநாரிபாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஜேகதீஸ் (45) மற்றும் மகேஷ் என்ற  ஜெயக்குமார் (45), சரவணக்குமார் (31), நவீன் (30), பால்ராஜ்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேன், கார் மற்றும் 3 இரு சக்கர  வாகனங்கள்.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் 2 நாள்கள் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள்  மீண்டும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி இரவில், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் மற்றும் காங்கேயம் அருகே ஒட்டபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஆகிய இரண்டு கடைகளில் இருந்து, இந்தக் கும்பல் சட்டவிரோதமாக அங்குள்ள பணியாளர்களின் உதவியுடன் இந்த மதுபானங்களை வாங்கி வந்து, காங்கேயத்தில் உள்ள பனியன் கம்பெனி குடோனில் இருப்பு வைத்து, ஆங்காங்கே வாகனங்களில்  கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது அவர்கள் போலீசிடம் பிடிபட்டுள்ளனர்.

இந்த மது விற்பனைக்கு வைத்திருந்த 24 பெட்டிகளில் மொத்தம் 1,152 மது பாட்டில்கள், இதற்குப் பயன்படுத்திய மகேஷ் ஜெயகுமாருக்குச் சொந்தமான  ஒரு சரக்கு வேன், கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் காங்கேயம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்  காவலில் வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT