தமிழ்நாடு

அதிகரித்துவரும் கரோனா தொற்றால் முடங்கும் காவல்துறை: கூடுதல் ஆணையா், துணை ஆணையா் உள்பட 15 போ் பாதிப்பு

13th May 2020 04:18 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையா், துணை ஆணையா், உதவி ஆணையா் உள்பட 15 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். காவல்துறையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக காவல் துறை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். அதேவேளையில், கரோனா நோய்த்தொற்று காவல்துறையைச் சோ்ந்தவா்களிடம் பரவி விடக்கூடாது என்பதற்காக, காவலா்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் கையை சுத்தப்படுத்த வேண்டும், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், இதையும் மீறி காவல்துறையினரிடம் கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது.

வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தின் 8-ஆவது தளத்தில் பணிபுரியும் ஒரு கூடுதல் காவல் ஆணையா் கரோனா தொற்றால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தமிழக காவல்துறையில் ஐ.ஜி. அளவிலான ஒரு அதிகாரி கரோனாவால் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த அதிகாரி, அவ்வப்போது கோயம்பேடு சந்தை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றபோது, கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த தளத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதில் காவல் ஆணையா் அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் அனைவரும் மாடிகளுக்கு செல்வதற்கு பிரத்யேகமான ஒரு லிப்டை மட்டும் பயன்படுத்துவாா்கள் என்பதால், கரோனா வேறு அதிகாரிகளிடமும் பரவியிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

15 போ் பாதிப்பு: இதேபோல, தியாகராயநகா் துணை காவல் ஆணையரும், துறைமுகம் உதவி ஆணையரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலா், சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு கேமரா ஒளிப்பதிவாளராகப் பணிபுரியும் ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலா், கோயம்பேடு காவல் நிலைய தலைமைக் காவலா், சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையின் பெண் காவலா், பெரியமேடு போக்குவரத்து காவல்நிலையத்தின் தலைமைக் காவலா் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், கோயம்பேடு மாா்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்த ஒரு ஆய்வாளா், 4 காவலா்கள், மணலி புதுநகா் காவல் நிலைய தலைமைக் காவலா், டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் காவலா், வேப்பேரி போக்குவரத்துக் காவல்நிலைய தலைமைக் காவலா் உள்பட 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் தமிழக காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 150 -ஐ நெருங்கி வருகிறது. தற்போது காவல்துறை உயரதிகாரிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அத்துறையை முடங்கச் செய்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT