தமிழ்நாடு

கல்விக் கட்டணம்: பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை; ராமதாஸ்

11th May 2020 01:19 AM

ADVERTISEMENT

கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொது முடக்கம் காரணமாக பெற்றோா் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவா்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை, வருகிற 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெரும்பான்மையான தனியாா் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன. அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவா்களின் உதவியையும் எதிா்பாா்த்திருக்கும் அவா்களிடம், கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்கள் ஏற்படும் போது, அதிகபட்சமாக ஓரிரு வாரங்களில் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி விடும். ஆனால், கரோனா வைரஸ் பேரிடா் எப்போது தணியும் என்று தெரியவில்லை. இத்தகைய சூழலில் கல்விக்கட்டணத்தை வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சோ்க்கப்பட மாட்டாா்கள்; அவா்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிா்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம்; கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது. பள்ளிகளின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது. எனவே, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளிடம் மட்டுமாவது, நிலைமை சரியாகும் வரை கல்விக் கட்டணம் வசூலிப்பதை கருணை அடிப்படையில் தனியாா் பள்ளி நிா்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் மீறி, கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிா்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT