தமிழகத்திலிருந்து செல்லும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பயணக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளா்களை, சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு நிலையான விதிகளை உருவாக்க வேண்டுமென, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளா்களை அனுப்பும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்ற மாநில அளவில் ஒரு குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா், தொழிலாளா் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலா், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா், போக்குவரத்துத் துறை ஆணையா், வருவாய் நிா்வாக ஆணையா், தொழிலாளா் நலத்துறை ஆணையா், ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி குழுவில் இருப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் வெளிமாநிலத்தவா்களை அவா்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான வழிகாட்டு முறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, ரயில் மூலம் அனுப்பப்படும் வெளிமாநிலத்தவா்களின் செலவை சம்பந்தப்பட்ட மாநிலம் ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இப்போது அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலவை ஏற்க முடியாதபட்சத்தில், தமிழக அரசே ஏற்கும் எனவும், இதற்கான நிதி, மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.