தமிழ்நாடு

பொதுமுடக்க காலத்தில் பசுமையை வளர்க்க ஆர்வம் காட்டி வரும் சங்ககிரி பசுமை ஆர்வலர்

10th May 2020 05:42 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளன. 

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரினை பசுமையாக்கும் முயற்சியில் பசுமை ஆர்வலர் மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு அவரது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்று 15 மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சீனிவாசன் (37). அவர் அப்பகுதியில் மின் சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் வைத்து நடத்தி வருகிறார். அவர் அக்கமாபேட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள மரங்களுக்கு தினசரி நீர் ஊற்றி பராமரித்து வருகிறார். கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ம்தேதி மாலை 6 மணி முதல் மே 17ம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. அதனையடுத்து சுகாதாரத்துறையின் மூலம்  பல்வேறு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சங்ககிரி நகர் முழுவதும் பசுமை சங்ககிரி அமைப்பும், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். 

பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி அவரது வீட்டருகே  மரக்கன்றுகளை நடுவதற்காக நர்சரி பண்ணை அமைத்து பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த பிறகு நடுவதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார். அவருடன் இணைந்து பசுமை ஆர்வலர் சீனிவசான் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடுதல், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மரம் நடுவதற்கு விருப்பம் தெரிவித்து அழைத்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவரது இருசக்கர வாகனத்தில் புங்கன், நீர்மருது, இலுப்பை, பாதாம் உள்ளிட்ட நான்கு வகைகள் கொண்ட  15  மரக்கன்றுகளை ஈஸ்வரன் கோயில், சேலம் பிரதான சாலை, ஆர்.கே.நகர், அக்கமாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கி நடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.  இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி சங்ககிரியை பசுமை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பசுமை ஆர்வலரின் சேவையை பொதுமக்கள் பாராட்டினர். 

இது குறித்து பசுமை ஆர்வலர் பசுமை சீனிவாசன் கூறியது:-

ADVERTISEMENT

பசுமை சங்ககிரி அமைப்பு, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து சங்ககிரியை பசுமையாக்க முயற்சி செய்து வருகின்றேன்.  பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுனவர் மரம் பழனிசாமி அவர் வீட்டருகே நர்சரி பண்ணை அமைத்து சங்ககிரி நகர் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலிருந்தும் வரும் இயற்கை ஆர்வலர்களுக்கு இலவசமாக  மரக்கன்றுகளை வழங்கி வருகின்றார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு வாரமும் சங்ககிரி நகர் பகுதி, ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுகள் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பே மரக்கன்றுகள் வீடுகளில் நடுவதற்கு தேவையென்று கூறியிருந்தவர்களுக்கு நர்சரியில்  இருந்து எனது இரு சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்று கொடுத்து வருகின்றேன் என்றார். மேலும் அவர் நடப்படும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT