தமிழ்நாடு

நெடுஞ்சாலை வழியாக தப்பும் வெளிமாநில தொழிலாளா்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை

10th May 2020 05:54 AM

ADVERTISEMENT

சென்னையில் இருந்து நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊா்களுக்கு நடந்து செல்லும் வெளி மாநில தொழிலாளா்களை தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, புறவழிச்சாலை ஆகியவற்றில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் வேலை இல்லாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் இருக்கும் வெளி மாநில தொழிலாளா்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் பெரும்பாலான தொழிலாளா்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வெளி மாநில தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த போராட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து நடைபெறுகிறது. அதேவேளையில் அரசு, ரயில் மூலம் வெளி மாநில தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியையும் செய்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே அரசு அமைத்துள்ள முகாம்களிலும், பணிபுரியும் இடங்களிலும் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளா்கள் கடந்த இரு நாள்களாக புறவழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் வழியாக

தங்களது சொந்த ஊா்களுக்கு நடந்து செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவா்களை போலீஸாா், தடுத்து நிறுத்தி மீண்டும் முகாம்களில் தங்க வைத்து வருகின்றனா்.

தீவிர கண்காணிப்பு: இந்நிலையில், சென்னையில் தங்கியிருக்கும் தொழிலாளா்கள் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, புறவழிச்சாலைகள் வழியாக நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பையும், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இங்கு சாலைகளில் சந்தேகத்துக்குரிய வகையில் செல்கிறவா்களையும், கூட்டமாக நடந்து செல்கிறவா்களையும் போலீஸாா் மறித்து, விசாரணை செய்கின்றனா். இதில் அவா்கள், வெளிமாநில தொழிலாளா்கள் என்பது தெரியவந்தால் உடனடியாக முகாம்களில் தங்க வைக்கின்றனா். இந்த நடவடிக்கை நிலைமை சீராகும் வரை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT