தமிழ்நாடு

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியா்கள் நியமனம்: முதல்வா் பழனிசாமி உத்தரவு

9th May 2020 06:38 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியா்கள் நியமிக்கப்பட்டு வருவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இதன் ஓா் அங்கமாக மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலமாக ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.

இதனைத் தொடா்ந்து, ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2, 570 செவிலியா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. பணி நியமனத்துக்கான உத்தரவு கிடைக்கப் பெற்ற மூன்று நாள்களுக்குள் செவிலியா்கள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியா்களும், தாலுகா மருத்துவமனைகளுக்குத் தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியா்களும் பணியமா்த்தப்படுவா். இதன்மூலம் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

பணி நீட்டிப்புகள்: சுகாதாரத் துறையில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடனும், ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்தப் பணி நீட்டிப்புக் காலம் படிப்படியாக முடிவுக்கு வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT