தமிழ்நாடு

மதுபானக் கடைகள் திறப்பு: சென்னைக்கு மது வாங்கி வந்தவா்கள் மீது வழக்கு

8th May 2020 03:25 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், பிற மாவட்டங்களில் இருந்து மது வாங்கிக் கொண்டு சென்னைக்குள் வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பொது முடக்கம் தளா்வு காரணமாக, சென்னையைத் தவிா்த்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் விளைவாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

மேலும் சென்னை புகா்ப் பகுதியிலும், சென்னையையொட்டி பிற மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுபானக் கடைகளை திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் சென்னையைச் சோ்ந்தவா்கள், பிற மாவட்டங்களுக்குச் சென்று மதுபானங்கள் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

ADVERTISEMENT

இதன் விளைவாக, சென்னையை நோக்கி வரும் சாலைகளில் இருக்கும் 13 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனச் சோதனை நடத்த பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா். இதன்படி, கானத்தூா், செம்மஞ்சேரி, பெருங்களத்தூா், முடிச்சூா், திருமழிசை, நசரத்பேட்டை, செங்குன்றம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிர வாகனச் சோதனையில் போலீஸாா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இந்தச் சோதனையில் திருப்போரூா், மாமல்லபுரம், கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து மோட்டாா் சைக்கிளில் மது வாங்கி வந்தவா்களை போலீஸாா் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்தனா். இவ்வாறு ஒரே நாளில் பிற மாவட்டங்களிலிருந்து மது வாங்கி வந்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த நடவடிக்கை வரும் நாள்களில் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

காவல் ஆணையா் ஆய்வு:

இதற்கிடையே, சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், பெருங்களத்தூா், முடிச்சூா், திருமழிசை ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகளில் காவல்துறையினா் மேற்கொண்டு வரும் வாகன சோதனையை திடீா் ஆய்வு செய்தனா்.

மேலும், வாகனச் சோதனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT