தமிழ்நாடு

ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.8.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

8th May 2020 01:02 PM

ADVERTISEMENT

 
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. சாதாரண நாட்களில் ரூ.1.50 கோடி அளவுக்கு மட்டுமே மது விற்பனை இருக்கும் நிலையில் மூன்று மடங்கு கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.

கரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு இருந்த மதுபான கடைகள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் மீண்டும் பல்வேறு கட்டுபாட்டுகளுடன்  திறக்கப்பட்டன.  இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால் இதையெல்லாம் மீறி வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. 

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தம் 203 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.  இதில் முதல்கட்டமாக  கரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் கடை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 143 டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டன.  இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் கடைகளில் 23 கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.  

மது வாங்க வரும் மக்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி, குடிமகன்கள் காலை 9 மணி முதலே கடைகளில் வந்து இடம் பிடித்து இருந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது.  ஒரே நேரத்தில் 5 பேர் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்பட்டனர்.  காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. 10 மணி முதல் ஒரு மணி வரை 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். 

ADVERTISEMENT

இதேபோல் 40 முதல் 50 வயது உள்ளவர்கள் 1 மணி முதல் 3 மணி வரை மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 3 மணி முதல் 5 மணி வரை மது வாங்க அனுமதிக்கப்பட்டனர்.  இதுதான் அரசு அறிவித்த வரைமுறை என்றாலும் பெரும்பாலான கடைகளில் இந்த முறை பின்பற்றப்படவில்லை.  மது வாங்க வந்த மக்களுக்குக் கையில்  சனிடைசர் ஊற்றிக் கைகழுவி பின்னர்தான் மது வங்க  அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மது விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் பணியில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாநகரைப் பொருத்தவரை கருங்கல்பாளையம் வீரப்பன்சத்திரம் சூரம்பட்டி போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.  இதைப்போல் அரசு மதுபான விலைகளை உயர்த்தி அறிவித்தது. அந்த அறிவிப்பு உடனடியாக நேற்று முதல் அமலில் வந்தது.

45 நாள்களுக்கு பிறகு மது வகைகளைக் குடிமகன்கள் வாங்கி ருசி பார்த்தனர். ஒவ்வொரு கடை முன்பு இரண்டு காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  தடுப்பு வேலிகள் அமைத்து மது வாங்க வருபவர்களிடம் நடைமுறை குறித்து அறிவித்துக் கொண்டிருந்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மது விற்பனை அமோகமாக நடந்தது விலை உயர்ந்தாலும்  ஈரோடு மாவட்டம் முழுவதும் மது விற்பனை வழக்கத்தை விடக் கூடுதலாக விற்றது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் இளங்கோ கூறியதாவது: 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் 143 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  மது வாங்க வந்தவர்கள்  விதிமுறைகளைக் கடைப்பிடித்து மது வாங்கி சென்றனர்.  நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ரூ.8 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.  

பொதுவாகவே சாதாரண நாட்களில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.1.50 கோடிக்கு தான் மது விற்பனை நடக்கும்.  தற்போது அரசு மதுபான விலைகளை உயர்த்தி உள்ளது. இதுவும் அதிக மது விற்பனைக்கு ஒரு காரணமாக உள்ளது. இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் அதிக அளவில் மது விற்பனை நடந்துள்ளது. இன்று முதல் மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாகக் குடை பிடித்தபடி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க இதுவும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் மேலும் வெயிலிலிருந்தும் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள இது வழிவகுக்கும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT