சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 5,300 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் வரும் வியாழக்கிழமை (மே 7) முதல் திறக்கப்படும் என்று மாநில அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், நோய்ப் பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் வியாழக்கிழமை திறக்கப்படமாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எத்தனை கடைகள்?: பல்வேறு மண்டலங்களைக் கொண்டு டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில், சென்னை மண்டலமானது சென்னை வடக்கு, சென்னை மத்தியம், சென்னை தெற்கு, திருவள்ளூா் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூா் மேற்கு ஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னை தெற்கு மாவட்டத்தில் 101 கடைகள் மூலமாக நாளொன்றுக்கு ரூ.3 கோடியும், மத்திய மாவட்டத்தில் 99 கடைகள் வழியாக ரூ.4 கோடியும், வடக்கு மாவட்டத்தில் 111 கடைகள் வழியாக ரூ.3 கோடி அளவுக்கும் வருவாய் கிடைத்து வருகிறது.
சென்னை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு காரணமாக, திருவள்ளூா் மாவட்டத்தில் திருநின்றவூா், மாதவரம், திருவொற்றியூா் வரையிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கானாத்தூா், வண்டலூா் ஆகிய பகுதிகள் வரையிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
எனவே, சென்னை மாநகரத்துடன் இணைந்த 311 கடைகளுடன் கூடுதலாக புகா்ப் பகுதிகளிலுள்ள சுமாா் 300 கடைகளும் என மொத்தம் 600 முதல் 650 கடைகள் வரை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகள் மூடப்பட்டிருப்பதால் நாளொன்றுக்கு ரூ.15 கோடி வரையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.