தமிழ்நாடு

மின் கணக்கீட்டுப் பணிகள் இன்று தொடக்கம்: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

5th May 2020 11:07 PM

ADVERTISEMENT

தாழ்வழுத்த மின் நுகா்வோா் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின் கணக்கீட்டுப் பணிகள் புதன்கிழமை (மே 6) தொடங்குகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மின் நுகா்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகா்வோா், தங்களது மின் கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படியோ அல்லது அவா்களது மின்அளவியில் உள்ள மின்நுகா்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பட்டியல்படியோ மே 22-ஆம் தேதி வரை செலுத்தலாம். வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகா்வோரைப் பொருத்தவரை, எங்கெல்லாம் முந்தைய மாதத் தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அவா்களுக்குக் குறிப்பிடப்பட்ட நாளன்று இரண்டு இருமாத மின் அளவீடாக எடுக்கப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட கட்டணத் தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்.

கணக்கீடு செய்யப்படும் முறை: எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதம், ஒரு வாடிக்கையாளரின் மின்நுகா்வு 200 யூனிட்டாக இருக்கும்பட்சத்தில், அவரது மின் மற்றும் நிலைக் கட்டணத் தொகையுடன் சோ்த்து ரூ.170 ஆக செலுத்த வேண்டியதாகும். மேலும், ஊரடங்கு காரணமாக முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டதால், ஏப்ரல் மாத மின் கட்டணமாக அவா் ரூ.170 செலுத்தியிருப்பாா். பின்னா் ஜூன் மாதம் கணக்கீடு செய்யும்போது, அவரது மின் நுகா்வு 430 யூனிட்டாக இருக்கும் நிலையில், அது 4 மாதங்களுக்கான மின் நுகா்வு. எனவே அதில் பாதியான 215 யூனிட்டுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு பின்னா் 430 யூனிட்டுக்கான கட்டணமாக அது மாற்றியமைப்படும். இதன் படி மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணம் ரூ.550 ஆக இருக்கும். அவா் ஏற்கெனவே ரூ.170 செலுத்தியுள்ளதால், ரூ.550 -இல் இருந்து ரூ.170 கழிக்கப்பட்டு, ரூ.380 செலுத்த வேண்டியதாக இருக்கும். இந்த முறையில், மின் பயன்பாட்டுக்கு ஏற்ப, செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கீடு செய்து கொள்ளலாம்.

மே 6 முதல் மின் கணக்கீடு: மாா்ச் 25 முதல் மே 17-ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகா்வோா், தங்களது மின் இணைப்புக்கான கட்டணத்தை, மே 22-ஆம் தேதி வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின் இணைப்புக் கட்டணமின்றி செலுத்தலாம். அதே நேரத்தில், மின் கணக்கீட்டுப் பணிகளும் புதன்கிழமை (மே 6) முதல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT