தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணம் வழங்கக் கோரி வழக்கு: உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

2nd May 2020 10:59 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகானந்தம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவா்களுக்கான உணவு, காய்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருள்களை வழங்க வேண்டும். மேலும் குடிநீா், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவைகளை விநியோகிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் வீடுகளுக்குச் சென்று கரோனா நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் ஊரடங்கு முடியும் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், அவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT