தமிழ்நாடு

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஏப்ரல் 14 வரை விடுமுறை

30th Mar 2020 02:32 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த 22 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை மஞ்சள் ஏல விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்றுக்காக எச்சரிக்கப்பட்ட நகரங்களில் ஈரோடும் ஒன்றாக உள்ளது. 

தற்போதைய சூழலில் மஞ்சள் சந்தைக்கு வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்புள்ளது. சமூக இடைவெளி தேவைப்படும் காலமாக உள்ளதால் ஆரோக்கியமாக இருக்காது. எனவே உறுப்பினர்கள் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மஞ்சள் வர்த்தகம் செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மீண்டும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி பொதுசுகாதாரம், இதர சந்தை நிலவரம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT