தமிழ்நாடு

ஆதரவற்றோரைப் பள்ளிகளில் தங்க வைக்க முடிவு: மாநகராட்சிக்கு வழிகாட்டிய தன்னார்வலர்

30th Mar 2020 02:45 PM

ADVERTISEMENT

 

ஈரோடு நகரில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பொது இடங்களில் தஞ்சம் அடைந்த வேலையிழந்த தொழிலாளர்களைப் பள்ளிகளில் தங்க வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஒரு வேளை உணவுக்குக் கூட வழி இல்லாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தவிர பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஈரோட்டில் ஹோட்டல், ஜவுளி நிறுவனங்கள் போன்றவற்றில் கடை நிலை ஊழியர்களாக இருந்த பலரும் ஊர் திரும்ப முடியாமல் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா போன்ற பொதுஇடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவுத்தேவையை பூர்த்தி செய்வது என்பது அரசு நிர்வாகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. தவிர இவர்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கச் செய்வதும் பெரும் பிரச்னையாக உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தான் சாலையோரம் மற்றும் பொதுவிடங்களில் வசிக்கும் மக்களைப் பள்ளிகளில் தங்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுவிடங்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களைப் பள்ளிகளில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி முதல்கட்டமாகக் காவேரி சாலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இத்தகைய ஆதரவற்றோரை தங்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 20 வகுப்பறைகள் உள்ளன. ஒரு வகுப்பறையில் 4 முதல் 5 பேரை தங்க வைக்க முடியும்.  இந்த நடவடிக்கை மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த முடியும் என்றனர்.

வழிகாட்டிய தன்னார்வலர்:

இத்தகைய ஆதரவற்றோரைப் பள்ளிகளில் தங்கவைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஆலோசனையை மாநகராட்சி நிர்வாகத்திடம் முன்வைத்த ஈரோடு ஜீவிதம் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் மணிஷா கூறியதாவது, கரோனா தடுப்பு நடவடிக்கையால் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள், வேலை இழந்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் பொதுவிடங்களில் தஞ்சம் அடைந்த மக்கள், ஒவ்வொரு வேளை உணவுக்கும் தன்னார்வலர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  சிலருக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் இத்தகைய நபர்கள் அதிகம் உள்ள பகுதிகளான ஈரோடு வஉசி பூங்கா, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெரிய மாரியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் பகுதிகளில் கணக்கெடுப்பை நடத்தினோம். அப்போது சுமார் 350 பேர் இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 25ஆம் தேதியிலிருந்து தினமும் 150 பேருக்கு 3 வேளை உணவு அளித்து வருகிறோம். இந்த மக்கள் வசிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், நோய்த் தொற்று இவர்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது என்பதை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தோம்.

இதனால் அவர்களைப் பள்ளிகளில் தங்க வைக்கலாம் என யோசனை தெரிவித்தோம். இந்த பணி ஒரே நாளில் சாத்தியமில்லை ஒரு வாரக் காலத்தில் கண்டிப்பாக அனைவரையும் இடம் மாற்றிவிடலாம் என்றோம்.  இதன் அடிப்படையில் தான் ஈரோடு காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியை ஆணையர் ஒதுக்கிக்கொடுத்துள்ளார். இங்கு உள்ள 20 வகுப்பறைகளில் 100 பேர் வரை தங்க வைக்க முடியும். வஉசி பூங்கா, மூலப்பட்டறை பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இங்குத் தங்க வைக்கப்படுவர்.

அவ்வாறு தங்க வைக்கப்படுபவர்களுக்கு 3 வேளை உணவையும் நாங்கள் அளித்து விடுகிறோம். மாநகராட்சி மூலம் சோப், முகக்கவசம் போன்றவை வழங்கப்படவுள்ளது. இதுபோல் பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள ஆதரவற்றோரையும் பள்ளிகளில் தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம், பொதுவிடங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு 3 வேளை உணவு கிடைக்கும். தவிர இந்த நபர்களால் சுகாதாரமும் பாதுகாக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT