தமிழ்நாடு

கரோனா: உண்டியலில் சேர்த்து வைத்த தொகையை நிதியாக அளித்த சிறுவன்

30th Mar 2020 09:38 PM

ADVERTISEMENT


கோவையில் உண்டியலில் சேமித்து வைத்த சில்லறை காசுகளை ஐந்தாம் வகுப்பு சிறுவன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டிருந்தார்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை சந்தித்த ஜெய்ஷ்னு எனும் சிறுவன், தாம் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 6,500 ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி அமைச்சரிடம் வழங்கினான். மேலும், தான் ரோலர் ஸ்கேட்டிங் வாங்குவதற்காக இந்த பணத்தை சேமித்து வைத்ததாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

உடனடியாக அந்த சிறுவனை பாராட்டிய அமைச்சர் வேலுமணி, ஸ்கேட்டிங் ஷூவை தாம் வாங்கி தருவதாக கூறினார்.

ADVERTISEMENT

இது குறித்து சிறுவன்  ஜெய்ஷ்னு கூறுகையில், கோவைபுதூர் ஆஸ்ரமம் பள்ளியில் ஐந்தாவது படித்து வருவதாகவும், சிறு வயதில் இருந்தே ஸ்கேட்டிங் ஷூ வாங்குவதற்கென இந்த பணத்தை சேமித்து வந்ததாகவும், தற்போது முதல்வரின் அறிவுரைப்படி இந்த நிதியை அமைச்சரிடம் வழங்கியதாக தெரிவித்தார். 

ஐந்தாவது பயிலும் சிறுவன் தாம் சேமித்து வைத்த சில்லறை காசுகளை முதல்வர் நிதிக்காக வழங்கிய இச்சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் பாராட்டுதலை பெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT