தமிழ்நாடு

அவசியமில்லாமல் வெளியில் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

30th Mar 2020 05:44 PM

ADVERTISEMENT


சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், "நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பால், மளிகை, உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவைகள் திறந்து வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியும், தண்டனைகளை வழங்கியும் துன்புறுத்துகின்றனர். 

இது சட்டவிரோதமான மனிதாபிமானமற்ற செயல். ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல் துறையினர் கைது செய்யலாம், அவர்களை தண்டிக்கக் கூடாது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது சாலைகளில் நடமாடும் பொதுமக்களை எந்தவித காரணமும் இல்லாமல் அடித்து துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை மற்றும் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில், ஊரடங்கு உத்தரவை  மீறியதாக  இதுவரை 17,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது. 

தமிழகத்தில் உள்ள கடைகோடி சராசரி மனிதன் இதனால் பாதிக்க கூடாது. அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் தனி மனிதனுக்கு வழங்கிய உயிர் வாழும் உரிமையும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டியுள்ளது. மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் இன்று விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT