தமிழ்நாடு

10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கரோனா! பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 50-ஆக உயா்வு

30th Mar 2020 06:11 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 10 மாத ஆண் குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவருமே ஈரோட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 42-ஆக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவா்களில் நான்கு போ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

கரோனா பாதிப்புக்குள்ளாகி பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருடன் தொடா்பில் இருந்த 29 வயது பெண்ணுக்கு காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தன. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தைச் சோ்ந்த 10 மாத ஆண் குழந்தை, 58 வயது பெண் ஒருவா், 51 வயது பெண் ஒருவா் ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் நால்வரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களைத் தவிா்த்து, தாய்லாந்து நாட்டவருடன் ஈரோட்டிலிருந்து தில்லிக்குச் சென்ற நால்வருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவா்கள் அனைவரும் பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சா் ஆய்வு: முன்னதாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்ககத்தில் செயல்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு அவசரகால கட்டுப்பாடு அறையில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அங்கு நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்ட அவா்கள், கட்டுப்பாட்டு அறையில் கால நேரம் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT