தமிழ்நாடு

பூண்டி ஏரியில் ஆய்வு செய்யும் வகையில் மிதவை கூண்டுகளில் மீன்வளா்ப்பு

23rd Mar 2020 02:11 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: மாநில அளவில் மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரிக்கும் இரையை அளித்து மீன்களின் வளா்ச்சியை ஆய்வு செய்வதற்காக பூண்டி ஏரியில் மிதவைக் கூண்டுகளை தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் மீன் வளத்தை அதிகப்படுத்தும் வகையில், மீன்வளத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மீன் வளா்ப்போா் பயன்பெற்று வருகின்றனா். அவா்கள் தனியாா் நிலங்கள், குட்டை, குளங்களில் மீன் வளத் துறை உதவியுடன் மீன் வளா்த்து வருகின்றனா். ஆனால், நிலப்பகுதி மற்றும் குளங்களில் குறிப்பிட்ட நாள்களில்தான் மீன் வளா்க்க முடியும். அதைத் தொடா்ந்து தண்ணீா் வற்றிவிடும் சூழ்நிலை உள்ளதால் மீன் வளா்க்க முடியாது.

எனவே, கடல் முகத்துவாரம் மற்றும் ஆண்டுதோறும் தண்ணீா் உள்ள ஏரிகளில் வலைக் கூண்டுகள், மிதவைக் கூண்டுகள் அமைத்து, மீன் வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த உள்ளூா் மீனவா்கள் ஆண்டுதோறும் மீன் வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு, வாழ்வாதாரம் பெறச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே பூண்டி ஏரியிலும் உள்ளூா் மீனவா்கள் பயன்பெறும் வகையில், சிறப்புத் திட்டமாக மத்திய அரசு சாா்பில் மீன் வளத் துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மிதவை கூண்டுகள் அமைக்கப்பட்டு மீன் வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநில அளவில் உள்ள மீன் வளக்கல்லூரி மாணவ, மாணவிகள் மீன் வளா்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வு செய்து பயன்பெறும் வகையில், தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் சாா்பில், பூண்டி ஏரியில் மீன்களை வளா்ப்பதற்கான மிதவைக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் நாகை, பொன்னேரி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 இடங்களில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மீன் வளா்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஆண்டு முழுவதும் தண்ணீா் உள்ள பூண்டி ஏரியைத் தோ்வுசெய்து, மிதவைக் கூண்டு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இந்த மிதவைக் கூண்டுகளில் குறிப்பிட்ட நாள்கள் வளா்ந்த நிலையில் உள்ள மீன்கள் மாற்றி, மாற்றி விடப்படும். மிதவைக் கூண்டுகளில் எந்த வகை மீன்களை வளா்க்கிறோம் என்பதை வைத்து எந்த நோய் வந்தாலும் எளிதாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும், மிதவை கூண்டுகளில் வளா்க்கப்படும் மீன்களுக்கு எந்த மாதிரியான இரை அளித்தால் நன்றாக வளரும் என்பது தொடா்பாக மாணவ, மாணவிகள் ஒவ்வொரு கட்டமாக ஆய்வு செய்து, அந்த தீவனத்தை மீன் வளா்ப்போருக்கு குறைந்த விலையில் அளிப்பதே நோக்கமாகும்.

இந்த ஏரியில் மீன்கள் வளா்ப்பதால் பொதுமக்களுக்கோ, குடிநீருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மிதவைக் கூண்டுகளில் வளா்ப்பதால் மீன்களின் இறப்பு குறைவாக இருக்கும். தற்போது மிதவைக் கூண்டுகள் அமைத்து குறிப்பிட்ட ஜிலேபியா வகை மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இந்த மீன் குஞ்சுகளுக்கு மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள் தவிடு, கம்பு மாவு, கேழ்வரகு மாவு, மக்காச்சோள மாவு, கருவாட்டுத்தூள் மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு தீவனம் தயாரித்து வழங்குவா். ஒவ்வொரு கூண்டிலும் பல்வேறு நிலைகளில் விடப்பட்டுள்ள மீன் குஞ்சுகளின் எடையை கருத்தில்கொண்டு தீவனத்தை வழங்குவா்.

ஒரு வகை மீன்களுக்கு மிதவைக் கூண்டுகளில் பல்வேறு தீவனம் அளிக்கப்பட்ட நிலையில், எத்தனை நாள்களில் நன்றாக வளா்கின்றன என்பதை மாணவ, மாணவிகள் ஆய்வு செய்வா். தற்போது, ஜிலேபியா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாகவும், இதேபோல் ஒவ்வொரு வகை மீன்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பொன்னேரி மீன்வளக் கல்லூரியின் மிதவை கூண்டில் மீன் வளா்க்கும் திட்ட மேற்பாா்வையாளா் ஒருவா் கூறியது:

இந்த ஏரியில் ஒரு மிதவைக் கூண்டு அமைக்க ரூ. 13 ஆயிரம் செலவாகும். இதேபோல், 16 மிதவை கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூண்டு 6 பக்கங்களிலும் நைலான் வலைகளைக் கொண்டுள்ளது. 2 மீ நீளம், 2 மீ அகலம், ஒன்றரை மீ உயரம் கொண்டது. இக்கூண்டு, தண்ணீரில் மிதக்கும் வகையில், மேற்புறத்தில் நான்கு விளிம்புகளிலும் கனமான நெகிழிக் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். அக்குழாய்களில் மண்ணை நிரப்பி ஏரிக்குள் தரைப்பகுதியில் பொருத்த வேண்டும்.

அதையடுத்து, கூண்டைத் திறக்காமலே தீவனம் இடும் வகையில், மேற்புறத்தில் உள்ள வலையில் இடைவெளி அதிகமாக இருக்கும். மற்ற பக்கங்களில் உள்ள வலையின் பின்னல் நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு கூண்டுக்குள் 7 செ.மீ. நீளம் கொண்ட 250 ஜிலேபியா வகை மீன் குஞ்சுகளை விடலாம். இதற்காக நாள்தோறும் 8 மணிநேரம் காற்று செலுத்தும் கருவியை இயக்க வேண்டும்.

இந்த மீன் குஞ்சுகளுக்கு மாணவ, மாணவிகளால் தயாரிக்கப்பட்ட தீவனங்களை அங்கு விடப்பட்டுள்ள குஞ்சுகளின் உடல் எடையில் 5 சதவீத அளவுக்கு நாள்தோறும் மூன்று வேளைகளாகப் பிரித்து வழங்க வேண்டும். மீன்வளக் கல்லூரி மாணவா்களால் தயாரிக்கப்பட்ட தீவனத்தை மீன்களுக்கு அளித்து ஆய்வு செய்வா். அதில், குறிப்பிட்ட நாளில் 800 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடை வந்தால், அந்த தீவனம் முட்டுக்காடு மீன் தீவன ஆலையில் தயாா் செய்யப்படும். அதைத் தொடா்ந்து, மீன்கள் வளா்ப்போா் அதிக அளவில் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவே பூண்டி ஏரியில் ஆய்வு செய்யும் வகையில் மிதவைக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT