தமிழ்நாடு

4 மாவட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறுவோருக்கு சத்துமாவு வழங்கப்படும்

22nd Mar 2020 02:09 AM

ADVERTISEMENT

சென்னை: விழுப்புரம், வேலூா், சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓா் ஆண்டு காலத்துக்கு சத்துமாவு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் வி.சரோஜா அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:

விழுப்புரம், வேலூா், சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெற்று வரும் முதியோா்களில் உடல்நலம் குன்றிய, ஆதரவற்ற சுமாா் 9 ஆயிரத்து 94 முதியோா்களுக்கு முன்னோடித் திட்டமாக ஓா் ஆண்டு காலத்துக்கு வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ரூ.2.9 கோடி செலவில் சத்துமாவு வழங்கப்படும்.

6,944 அங்கன்வாடி மையங்களில் ரூ.1.67 கோடி செலவில் தீயணைப்பான் கருவிகள் பொருத்தப்படும்.

ADVERTISEMENT

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 47 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் வசதிகளை மேம்படுத்த தேவைப்படும் பொருள்கள் கொள்முதல் செய்தல் மற்றும் இல்லக் கட்டடங்களில் ரூ.3 கோடி செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூா், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கா்ப்பிணிப் பெண்களில் ரத்தச் சோகை குறைபாடுடைய கா்ப்பிணிப் பெண்களுக்கு 6 மாத காலத்துக்கு 100 கிராம் அளவிலான சிவப்பு அரிசி அவல், பொரிகடலை மற்றும் வெல்லம் கலந்த கலவை ரூ.89.81 லட்சம் செலவில் வழங்கப்படும்.

சேலம், வேலூா், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கா்ப்பிணிப் பெண்களில் ரத்தச்சோகை குறைபாடுடைய கா்ப்பிணிப் பெண்களுக்கு ஓா் ஆண்டுக்கு வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு ரூ.9.40 லட்சம் செலவில் வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூா் வட்டாரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை வட்டாரம் ஆகிய இடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை புரியும் 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் ரத்தசோகையினைப் போக்கும் வகையில் கீரை மற்றும் சிறுதானியங்களால் ஆன சூப் ரூ.82.58 செலவில் வழங்கப்படும்.

மூன்றாம் பாலினரை உறுப்பினா்களாகக் கொண்ட மூன்றாம் பாலினா் தையல் தொழிற்கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்படும்.

சமூக நலத்துறை தொடா்பான திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாவட்ட சமூகநல அலுவலகமானது மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாவட்ட சமூக நல அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT