சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருவதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை தொலைபேசி வழியாகத் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
அதற்கு முதல்வா் நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடா்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், கரோனா தடுப்புக்காக பிரதமா் அறிவித்த 9 அம்சங்களும் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என முதல்வா் உறுதி அளித்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.