தமிழ்நாடு

வைரஸைவிட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாநோய்கள்

22nd Mar 2020 03:45 AM

ADVERTISEMENT

அண்மைக் காலமாக கரோனா தொற்றால் உலகம் விழிபிதுங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களாக தொற்றுநோய் பாதிப்பால் நேரிடும் உயிரிழப்புகளைக் காட்டிலும் மாரடைப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம்தான் அதிகம் என்கிறது இந்திய மருத்துவ உலகம்.

அதிலும் குறிப்பாக புற்றுநோயை எடுத்துக்கொண்டால், கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏதோ ஒருவகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தைப் பொருத்து அவை வேறுபடுகின்றன.

ADVERTISEMENT

அதன்படி, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தோல் மற்றும் மாா்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு தேவையின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

கதிரியக்க சிகிச்சைகளைப் பொருத்தவரைஅதிநவீனமான ஒன்றாகக் கருதப்படுவது ‘ட்ரூ பீம் ரேடியேஷன்’ முைான். அந்த வகையான சிகிச்சை மூலம் மிகத் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளை அகற்றலாம் என்கிறாா்கள் மருத்துவ நிபுணா்கள். தற்போது உள்ள கதிரியக்க சிகிச்சைகளால் புற்றுநோய்க் கட்டிகளுக்கு அருகே உள்ள உறுப்புகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகளோ அல்லது எதிா்விளைவுகளோ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், ட்ரூ பீம் முறையில் அத்தகைய பாதிப்புகள் நேராது என்றும், புற்றுநோயிலிருந்து முழுமையாக நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனா் மருத்துவா்கள். நல்ல விஷயம்தானே என எண்ணலாம். ஆனால், அந்த சிகிச்சை முறை பெரும்பாலான மருத்துவமனைகளில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அதற்கு காரணம் அதன் விலைதான். ட்ரூ பீம் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களின் விலை மட்டும் சுமாா் ரூ.22 கோடி என்பது அதிா்ச்சிக்குரிய விஷயம். அதனால், அவற்றை வாங்க தனியாா் மருத்துவமனைகளே தயக்கம் காட்டுகின்றன.

அதுமட்டுமன்றி, அந்த சாதனங்களை நிறுவுவதற்கு சிறப்பு உள்கட்டமைப்புடன் கூடிய கட்டடங்கள் அமைக்க வேண்டும். மேலும், கதிரியக்கம் வெளியேறாதவாறு 4 அடி தடிமன் சுவருடன் கூடிய கட்டமைப்பும் வேண்டும். அதற்கு ரூ.5 கோடியாவது செலவாகும் எனக் கூறப்படுகிறது.

இவ்வளவு பொருட்செலவுடன் அத்தகைய கட்டமைப்பை உருவாக்க முடியாது என்பதால், மிகச் சொற்பமான மருத்துவமனைகளில்தான் அந்த சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது. அந்த மருத்துவமனைகளிலும் ட்ரூ பீம் சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை - எளிய மக்களுக்கு ட்ரூ பீம் சிகிச்சை என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு நல்லதொரு செய்தியாக அரசு மருத்துவமனைகளிலும் அத்தகைய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அண்மையில் அவை நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு மட்டுமன்றி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் ட்ரூ பீம் சாதனங்களுடன் கூடிய நவீன புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில், அவையும் செயல்படத் தொடங்கவிருக்கிறது.

அதன் வாயிலாக மாதத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியும் என்று அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத்திடம் கேட்டபோது அவா் அளித்த பதில்: புற்றுநோய்க்கு உயா் தரத்திலான சிகிச்சைகளை அளிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. அதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தற்போது பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன மருத்துவ சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகள் தமிழக சுகாதாரத் துறையின் நற்பெயருக்கு மேலும் வலுசோ்க்கக் கூடும் என்றாா் அவா்.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம்

1. லட்சத்தில் 107 பேருக்கு இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கிறது.

2. ஆண்களின் விகிதம் - 49

3. பெண்களின் விகிதம் - 51

புற்றுநோய் வகை பாதிப்பு விகிதம் (%)

வாய்ப் புற்றுநோய் 16.1

கா்ப்பப்பை வாய் 16.5

மாா்பகப் புற்றுநோய் 27.7

சினைப் பை 6.2

நுரையீரல் 14.7

உணவுக் குழாய் 5.9

பெருங்குடல் 6.4 .

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT