தமிழ்நாடு

ஒசூரில் கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற வாகனத்தில் தீ விபத்து: 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

19th Mar 2020 09:21 PM

ADVERTISEMENT

 

ஓசூர்: ஒசூரில் கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியில் உள்ள தனியார் கேஸ் குடோனில் இருந்து 450 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் ஒன்று ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது

அப்போது அலசநத்தம் பகுதியில் அந்த வாகனம் சென்றபோது அங்குள்ள சாலை பள்ளத்தில் ஏறி இறங்கியதில் கேஸ் சிலிண்டர் கசிந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது சிதறி மளமளவென சுற்றிலும் பரவியது. இதில் அங்கு உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீயானது பரவி உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது

ADVERTISEMENT

அதேபோல கடைகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ என அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து கருகியது இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் பற்றி அறிந்த கேஸ் சிலிண்டரையும் மற்றும் தீப்பற்றி எரிந்த வாகனங்கள் மற்றும் கடைகளில் பற்றி எரிந்த தீயிலும் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயானது கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் போர்க்களமாக காட்சியளித்தது

இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் இரண்டு புறங்களிலும் குவிந்தனர். அருகிலுள்ள  டெய்லர் கடை, மருந்து கடை, எலக்ட்ரீசியன் கடை, மளிகை கடை உள்ளிட்ட 12 கடைகளில் உள்ள பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாயின. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அப்பகுதியில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் என அனைவரையும் விரட்டினர்.

இந்த தீ விபத்தில் ஹோட்டலில் வேலை பார்த்த வட மாநிலத்தைச் சேர்ந்த சம்சு என்பவர் பலத்த காயமடைந்தார் அதே போல அங்கு நின்ற ஒரு பெண்  மற்றும் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த  நியாசூதீன் என மூன்று பேர் தீக்காயம் அடைந்தனர். நீண்ட நேரத்துக்குப்பின் 2 தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் தீயானது அணைக்கப்பட்டதால் அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதமும் பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது இது குறித்து அட் கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT