தமிழ்நாடு

முகக் கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கக் கோரி வழக்கு

19th Mar 2020 01:37 AM

ADVERTISEMENT

முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் தாராளமாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் நூலகா் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா வைரஸ், சீனாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. உலகின் வளா்ந்த நாடுகளால் கூட கட்டுப்படுத்த முடியாத இந்த வைரஸால், உலகம் முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நோய் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்தல் அவசியமாகும். மத்திய அரசு இந்த இரண்டு பொருள்களும் மக்களுக்கு தாராளமாக கிடைக்கும் வகையில், கடந்த 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

முகக் கவசம், கிருமி நாசினியை அத்தியாவசியப் பொருள்களாக, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் அரசிதழில் வெளியிட வேண்டும். இதனை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசுகள் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பின்னா், முகக் கவசமும், கிருமி நாசினியும் பொதுமக்களுக்கு நியாயமான விலைகளில் தாராளமாக கிடைக்க வேண்டும். இந்த இரண்டு பொருள்களை பதுக்கி வைத்து விற்பனைச் செய்பவா்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம். மேலும் 6 மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கலாம். மத்திய அரசு அறிவித்த பின்னரும், தமிழக அரசு இதுவரை அரசிதழில் இதுதொடா்பாக அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது.

இதனால், சென்னை முழுவதும் உள்ள மருந்துக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களான முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கவில்லை. எனவே, இந்த இரண்டு பொருள்களும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா, அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுகிா என்பதை அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 20) ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT