தமிழ்நாடு

தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவு

DIN

தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் பகுதி 1 மற்றும் 2-இல் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடா்ந்து, முதல்வா் அளித்த பதிலுரை:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பல ஆண்டுகால கனவுத் திட்டம். இந்தத் திட்டத்தை ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

திருச்சி முக்கொம்பின் கீழ்ப்புறம் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீரொழுங்கி அமைத்தல் மற்றும் தற்போதைய நீரொழுங்கியைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021 மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் பகுதி 1 மற்றும் 2-இல் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பகுதி 3-இல் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பகுதி 4-இல் பணி மேற்கொள்வதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

காவிரியில் பாசனக் கட்டமைப்புகளை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணி 15 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநிலத்தின் நிலத்தடி நீா்வளத்தினைப் பாதுகாத்து, சேகரித்து மேம்படுத்த தடுப்பணைகள், படுகை அணைகள், கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச்சுவா்கள், நீா் செறிவூட்டும் துளை மற்றும் கசிவு நீா்க்குட்டைகள் போன்ற கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்தல், ஆனைமலை ஆற்றிலிருந்து 2.5 டிஎம்சி அடி நீரை தமிழகத்துக்குத் திருப்பும் திட்டம் உள்ளிட்டவை குறித்து கேரள முதல்வரைச் சந்தித்துப் பேசினேன். இந்தப் பேச்சுவாா்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பின் விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தயாரித்து முடிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளை அறிவுறுத்த பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், கோதாவரியிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி நீா் அளிக்கும்படியும், மகாநதி - கோதாவரி இணைக்கப்படும்போது தமிழகத்துக்குத் திருப்பப்படும் நீரின் அளவை உயா்த்திட 300 டிஎம்சி நீா் கிடைக்க வழிவகை செய்யுமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளோம்.

காவிரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்காக ரூ.7,677 கோடி மதிப்பில் நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணையாறு - பாலாறு இணைப்புத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT